Canadamirror Canada Mirror,

Latest Tamil News

"கோவிட்-19 எங்களை நெருங்காது" சீனா வழங்கிய 30 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நிராகரித்த வட கொரியா!

 Source: Bbc Tamil.


பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,


தங்கள் நாட்டில் கொரோனா இல்லை என வடகொரியா தொடர்ந்து கூறி வருகிறது

சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா கேட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

உலகளாவிய தடுப்பூசி பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பிவிடுமாறு வடகொரியா கேட்டுக் கொண்டதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை வட கொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

சுகாதாரப் பணியாளர்கள், காய்ச்சல் உள்பட பல்வேறு அறிகுறிகள் தென்பட்டவர்கள் என 32,291 பேர் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவர்களில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் உலக சுகாதார நிறுவனம் தனது வாராந்திர சூழ்நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே வடகொரியா கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அது தனது எல்லைகளை முற்றிலுமாக மூடிவிட்டது.

வடகொரியா தடுப்பூசிகளை நிராகரிப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஜூலை மாதத்தில் சுமார் 20 லட்சம் டோஸ் ஆஸ்ட்ரோஜெனீகா தடுப்பூசியை வடகொரியா நிராகரித்தது. பக்கவிளைவு ஏற்படும் அபாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டி தடுப்பூசிகளை மறுத்ததாக உளவுத்துறையுடன் தொடர்புடைய தென்கொரியாவை சேர்ந்த சிந்தனைக் குழு ஒன்று தெரிவித்தது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை வடகொரியாவுக்கு வழங்க ரஷ்யா பல முறை முன்வந்ததாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் கடந்த ஜூலை மாதம் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து வடகொரியா சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு பாதகமான பக்கவிளைவுகள் ஏற்பட்டதை வடகொரியாவின் அரசு ஊடகங்கள் அடிக்கடி செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.

எல்லைகள் மூடப்பட்டதால் உணவுப் பஞ்சம்

அண்மையில் வடகொரியாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு ராணுவத்துக்கு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

கிம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெள்ளத்தில் 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன என்றும் சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என்றும் அரசுத் தொலைக்காட்சி கூறியது. மேலும் விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதத்தில் நாட்டில் உணவு தொடர்பான "பதற்றமான" சூழல் ஏற்பட்டதாக கிம் ஜோங் உன் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக வடகொரியாவில் தானிய உற்பத்தி இலக்குகளை எட்டமுடியவில்லை. அதனால் இந்த ஆண்டு அறுவடையை நாடு நம்பியிருந்தது.

அணு ஆயுதச் சோதனைகள் காரணமாக சர்வதேச அளவில் வடகொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த தனது எல்லைகளை வடகொரியா மூடியுள்ளது. உணவு, உரம் மற்றும் எரிபொருள்களுக்கு சீனாவை மட்டுமே வடகொரியா நம்பியிருக்கிறது. தற்போது எல்லைகள் மூடியிருப்பதால் இந்த சரக்குப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

1990களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு வடகொரியா நாடு தழுவிய பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 30 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

www.Canadamirror.Com Designed by Templateism.com Copyright © 2014-2021

தீம் படங்களை வழங்கியவர்: Bim. Blogger இயக்குவது.