Canadamirror Canada Mirror,

Latest Tamil News

உலகை வியக்க வைக்கும் கியூப மருத்துவ உதவி: நியூயோர்க்கை முடக்கும் முடிவு கைவிடப் பட்டது!

உலகில் 1 இலட்சத்துக்கும் அதிகமான தொற்றுக்களுடன் கோவிட்-19 இனால் அதிக தொற்றுக்கு உள்ளான நாடாக 
மாறியுள்ள அமெரிக்காவில் இதில் பாதிக்கும் அதிகமான எண்ணிக்கை நியூயோர்க்கில் இருப்பதாகவும் கணக்கிடப் பட்டுள்ளது.
சனிக்கிழமை வரை அங்கு பலியாகி இருக்கும் பெரும்பாலான மக்கள் நியூயோர்க்கை சேர்ந்தவர்களே!
மேலும் அமெரிக்காவில் ஒரே நாளில் மொத்தம் 21 309 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதை அடுத்து ஒட்டு மொத்த நியூயோர்க் நகரையே தனிமைப் படுத்த பரீசிலிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் நகரை ஒட்டுமொத்தமாக முடக்குவது அல்லது தனிமைப் படுத்துவதன் மூலம் மருத்துவ ரீதியாக என்ன சாதிக்க முடியும் என்பது தெளிவாக இல்லாத நிலையில், சட்ட ரீதியாகவும் இதனை அமுல் செய்ய முடியாது என நியூயோர்க் கவர்னர் ஆண்ட்ரூ க்யுமோ கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின் படி,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நியூயோர்க் மாகாணத்தை தனிமைப் படுத்தவுள்ளதாக சனிக்கிழமை அறிவித்த டிரம்ப், நள்ளிரவில் அந்த முடிவை திரும்ப பெற்றுள்ளார். இது குறித்து மாகாணத்தின் ஆளுநர் முடிவு செய்யவும் அவர் பரிந்துரைத்துள்ளார் எனத் தெரிய வருகின்றது.
இதேவேளை உலகின் செல்வந்த நாடு அல்லாத அதே நேரம் அபாரமான மருத்துவர்களைக் கொண்டுள்ள கம்யூனிச நாடான கியூபா இந்த இக்கட்டான கொரோனா சூழலில் பல நாடுகளுக்குத் தனது மருத்துவ உதவியை வழங்க முன் வந்திருப்பது உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது. கியூபாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் செல்வந்த நாடான இத்தாலி தனக்கு இக்கட்டான கோவிட்-19 சூழலில் உதவ ஐரோப்பிய யூனியனே தவறி விட்டதாக குற்றம் சாட்டி இருந்தது.
இந்நிலையில் இத்தாலிக்கு 52 டாக்டர்கள், மற்றும் செவிலியர்களை விசேட விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது கியூபா. தங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த உதவிக் கரத்தை மேலும் 5 நாடுகளுக்கும் கியூபா மருத்துவர்கள் நீட்டியுள்ளனர். உலகின் தலை சிறந்த மருத்துவர்களில் பலரைக் கொண்டுள்ள கியூபாவில் முற்றிலும் இலவசக் கல்வி மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் அமெரிக்காவின் தீராத பகை நாடான கியூபா மீது நூற்றுக்கும் அதிகமான பொருளாதாரத் தடைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப் பட்டுள்ளன.
1981 ஆமாண்டு டெங்குக் காய்ச்சலுக்கு எதிராகப் பெரும் வெற்றி பெற்ற கியூபாவின் கண்டுபிடிப்பான Cuban Interferon Alpha 2B என்ற மருந்து தான் கோவிட்-19 தொற்றுக்கு எதிராகவும் வீரியமாகச் செயற்பட்டுள்ளது. இதனை சீனாவே ஒப்புக் கொண்டும் உள்ளது. தற்போது கொரோனாவுக்கு எதிராக உலக சுகாதாரத் திணைக்களம் பரிசோதித்து வரும் 4 மருந்துகளில் இதுவும் ஒன்றாகும்.
சமீபத்தில் 1000 பேருடன் கரீபியன் கடலில் தத்தளித்த ப்ரீமர் என்ற சொகுசுக் கப்பலில் 5 பேர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் எனத் தெரிய வந்ததும் பல நாடுகள் அக்கப்பலை ஏற்க மறுத்தன. ஆனால் கியூபா தானாக முன் வந்து தனது நாட்டில் அக்கப்பல் நங்கூரமிட அனுமதி கொடுத்ததுடன் அதில் இருந்த பயணிகளைப் பரிசோதித்து ஏராளமான பிரிட்டன் மக்கள் விமானம் மூலம் தாயகம் திரும்ப வழி செய்தது. இதற்குப் பிரிட்டன் அரசும் மக்களும் நன்றி தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

www.Canadamirror.Com Designed by Templateism.com Copyright © 2014-2021

தீம் படங்களை வழங்கியவர்: Bim. Blogger இயக்குவது.